புதிரான உலகம்...Puthir.Com

தூங்க வைக்கும் நவீன ரோபோ தலையணை!

0 15

நவீன கண்டுபிடிப்புகள் வளர்ச்சி, நம்மை தூங்க வைக்கும் வரை கொண்டு வந்துள்ளது.  ‘இன்சோம்னியா’ என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக புதிய ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

நிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி படுத்துக்கொண்டால் விரைவிலேயே தூக்கத்தைத் தழுவிவிடலாம் என்கிறார்கள் இதை கண்டுபிடித்தவர்கள்.

இத்தலையணையில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ‘சென்ஸர்’கள் (உணரிகள்) நீங்கள் தூங்குவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடுகின்றன. பின்னர், அதற்கான மாற்று ஏற்பாடுகளை தானே ‘யோசித்து’ உங்களுக்கு வழங்கத் தொடங்குகின்றன. இதன்மூலம் உடனடியாக நீங்கள் நித்திரைக்குச் செல்ல முடியும்.

உங்களது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சோம்நொக்ஸும் செயற்கையாகச் சுவாசிக்கிறது. மேலும், உங்களுக்கு உறக்கம் வருவதற்குப் போதுமான வெளிச்சத்தில் ஒரு மெல்லிய விளக்கையும் எரிய வைக்கிறது.

ஒருவேளை உறக்கத்தின்போது நீங்கள் கனவுகண்டு உங்கள் தூக்கம் கலையவிருக்கும் சந்தர்ப்பங்களில், தாலாட்டுப் பாடி(!) தூங்கவைக்கிறது.

தற்போது பரிசோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்த தலையணை ரோபோ, வெகு விரைவில் உங்கள் கட்டில்களில் தவழும் என்கிறார்கள் இதைத் தயாரித்திருக்கும் ஆய்வாளர்கள்.